×

பணி நியமன முறைகேடு மேற்கு வங்க அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை: பழிவாங்கும் நடவடிக்கை? திரிணாமுல் காங். குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி பணி நியமனங்களில் நடந்த முறைகேடு தொடர்பாக அமைச்சர், எம்எல்ஏ. வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவரது ஆட்சியில் கடந்த 2014-2018 கால கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, இதனை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மாநில நகர்புற மேம்பாடு மற்றும் நகராட்சி துறை அமைச்சர் பிர்கத் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சரும் கமார்கத்தி எம்எல்ஏ.வுமான மதன் மித்ரா ஆகியோரிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. முன்னதாக, கொல்கத்தாவின் செட்லா பகுதியில் உள்ள ஹக்கீம் வீடு, வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் பாபனிபூரில் உள்ள மதன் மித்ராவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்களது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது அறிந்த உடன், அவர்களது வீட்டின் முன்பு அவர்களுடைய ஆதரவாளர்கள் கூடி சிபிஐ.க்கு எதிராக கோஷமிட்டனர்.

திரிணாமுல் மூத்த தலைவர் சவுகதா ராய், “ஒன்றிய அரசிடம் நிதி கோரி ராஜ்பவன் முன்பு அபிஷேக் பானர்ஜி நடத்தும் போராட்டத்தை திசை திருப்பவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இந்த சோதனை நடத்தப்படுகிறது,” என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த பாஜ செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாசார்யா, “திரிணாமுல் காங்கிரசிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால், ஏன் சிபிஐ, அமலாக்கத்துறையை கண்டு பயப்படுகிறது?,” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “பணி நியமன முறைகேடு தொடர்பாக கொல்கத்தா, காஞ்சிரபாரா, பராக்பூர், ஹலிஷாகர், டம் டம், வடக்கு டம் டம், கிருஷ்ணாநகர், கமார்கத்தி, செட்லா பவானிபூர் உள்பட 12 இடங்களில் இன்று (நேற்று) சிபிஐ.யினர் அரசு அதிகாரிகள் உள்ளிடோரின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர்,” என்று தெரிவித்தார்.

The post பணி நியமன முறைகேடு மேற்கு வங்க அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை: பழிவாங்கும் நடவடிக்கை? திரிணாமுல் காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : CBI ,West Bengal ,minister ,MLA ,Trinamool Congress ,Kolkata ,Dinakaran ,
× RELATED மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை...